இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படும் நிலையில், அதில் இருந்த 62 பேரின் நிலை கேள்விக்குறி ஆகியுள்ளது.

ஜகார்தாவில் உள்ள சொகர்னோ ஹட்டா Soekarno-Hattaவிமான நிலையத்தில் இருந்து, பாண்டியனாக் Pontianak என்ற இடத்துக்கு புறப்பட்ட, போயிங் 737-500 ரக விமானம் டேக் ஆப் ஆன 4 நிமிடங்களில் திடீரென ரேடார் கருவிகளின் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. இந்த விமானத்தில் 50 பயணிகளுடன், 12 விமான ஊழியர்கள் பயணித்தனர்.10,900 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 250 அடி உயரத்திற்கு அதி வேகமாக கீழே இறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, கடலில் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் சத்தத்தை கேட்டதாக கூறும் இந்தோனேசிய மீனவர்கள், விமானத்தின் சில உடைந்த பாகங்களின் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இதனால், விமானம் கடலில் விழுந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாகவும், விமானத்தில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கியிருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.இதையடுத்து, விமானத்தை தேடும் பணியில் 4 கப்பல்கள் மற்றும் மீட்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், கிடைத்திருக்கும் உடைந்த பாகங்கள் குறிப்பிட்ட விமானத்தின் பாகங்கள் தான் என்பது உறுதி செய்யப்படவில்லை